உயர்திரு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
தினமலர் 22.03.2009ஆம் நாளிட்ட சென்னை, மதுரை, நெல்லை பதிப்புகளில் மறுமலர்ச்சி தி.மு.க.வை திட்டமிட்டு களங்கப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தேசியத் தமிழ் நாளிதழாகத் தம்மைவிளித்துக் கொள்ள விரும்பும் ‘தினமலர்,’ சமீப காலங்களில் மறுமலர்ச்சி தி.மு.க. குறித்து பரப்புகின்ற செய்திகளால் ‘தினமலர்’ தனது நடுநிலை அணுகுமுறையை முற்றிலும் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
எந்தக் கட்சி குறித்து விமர்சனங்கள் எழுதப்படுகிறதோ அந்தக் கட்சியின் பிரதிநிதியிடமும் உரிய பதிலைக் கேட்டு அதனையும் பதிவு செய்து தமது நடுநிலையை உறுதி செய்திட வேண்டும் என்ற பத்திரிகைத் தர்மத்தை ‘தினமலர்’ துறந்துவிட்டதோ என்ற எண்ணம்தான் தங்கள் பத்திரிக்கையைப் படிக்கின்ற பலருக்கும் ஏற்படுகிறது.
தினமலரின் அவசரகோல - ஒரு தலைப்பட்சமான விமர்சனங்களைப் படித்து வைகோவின் அன்புக் கண்மணிகள் நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோம்.
கருத்துச் சுதந்திரம், நடுநிலை தவறாமையில் நம்பிக்கை தினமலருக்கு இருப்பது உண்மையானால் உணர்ச்சி உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் எனது கடிதத்தை வெளியிட வேண்டுகிறேன்.
அரசியல் கட்சிகள் என்பது வாரிசுகளின் வேலை வாய்ப்பு அலுவலகங்களாக ஆக்கப்பட்டு வரும் கொடுமைகளைக் குறி வைத்து வீழ்த்திவருவதோடு, உழைக்கின்ற தொண்டனே ஒரு கட்சியில் உயர்வு பெற வேண்டும் என போராடி வருகின்ற தலைவர் வைகோ.
கண் விழிக்காத குக்கிராமங்களில் கடமையாற்றுகின்ற எளியத் தொண்டன், மறுமலர்ச்சி தி.மு.க. எனும் மாளிகையைத் தாங்கி நிற்கின்ற தூண்களாக விளங்குகின்ற மாவட்டச் செயலாளர்கள், நெருப்பாற்றில் நீந்தும் இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து வரும் தளகர்த்தர்கள் என அனை வரையும் தம் சகாக்களாகவே ஏற்றுப் பணியாற்றுகின்றவர்தான் வைகோ.
நிலத்தின் ஆணி வேர்களாய் இந்நிலப்பரப்பின் எல்லாத் திக்கிலும் நிறைந்திருக்கின்ற அந்தச் சகாக்களின் உணர்வு எதுவோ, அதுவே வைகோவின் உணர்வு. அவர்கள் எதைச் சொல்கின்றனரோ அதைச் செய்து முடிக்கின்ற தலைமைச் சகாதான் எங்கள் வைகோ. அதனால்தான் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காக ஓடிப் போகின்றவர்கள் எந்த அÞதிரத்தைப் பிரயோகித்தாலும் வைகோவின் சகாக்களை அவரிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. இரத்தமும், சதையுமாக வைகோவுடன் நின்று மறுமலர்ச்சி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவமும்; பல பதவி வாய்ப்புகளும் பெற்று மறுமலர்ச்சி தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்து விலகிச் சென்றுவிட்ட திரு.மு.கண்ணப்பன் அவர்களுடன் தனிப்பட்ட ஆதாயம் சார்ந்த, விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தவிர்த்து கொங்குநாட்டின் கொள்கை வேங்கைகள் எவரும் செல்லவில்லை என்பது ஒன்றே வைகோ தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க. கொண்டிருக்கும் கொள்கைப் பிடிப்புக்கு ஓர் தெளிவான சான்றாகும்.
அதன் மற்றொரு சான்றுதான் கோவையில் மார்ச் 20ஆம் நாள் இலட்சிய வேங்கை நாஞ்சில் சம்பத் கைதைக் கண்டித்து வைகோ தலைமை ஏற்ற ஆர்ப்பாட்டம். மேடைக்குச் செல்ல காரைவிட்டு இறங்கவே பல நிமிடம் ஆயிற்று. ஒரே உணர்ச்சிப் பிரவாகம். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அகன்ற வீதியான டாக்டர் நஞ்சப்பா சாலையின் ஒரு பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்கிற அளவுக்கு பல்லாயிரவர் திரண்ட கூட்டம்.
‘தினமலர்’ கோவைப் பதிப்பின் மார்ச் 21ஆம் நாளிட்ட ஆர்ப்பாட்ட புகைப்படமே அதற்குச் சான்று. மறுமலர்ச்சி தி.மு.க.வை எவரது விலகலும் சிறிதும் சலனப்படுத்த முடியாது என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?
தினமலர் வாதப்படியே பார்ப்போமானால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுகிறவர்கள் எப்போது இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆனார்கள்.
தி.மு.க.வில் இருந்து அதன் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன்; துணைப் பொதுச் செயலாளர் ப.உ.சண் முகம் முன்னணித் தளகர்த்தரான க.ராஜாராம் போன்றவர்கள் வெளியேறிய இடங்களுக்கு அதன்பின் அமர்த்தப் பட்டவர்கள்தான் இன்று ‘தினமலர்’ குறிப்பிடுகிற இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க. ஜானகி அம்மையார் தலைமையில் ஓர் அணி. இன்றைய அதன் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஓர் அணி என்று இரண்டாக பிளவு பட்டபோது எம்.ஜி.ஆருடன் நேசம் காட்டி நின்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் ஜானகி அம்மையாருடன் இணைந்து நின்றனர். அந்த இடங்களுக்கு காலப்போக்கில் அமர்த்தப் பட்டவர்கள்தான் நீங்கள் குறிப்பிடக் கூடிய அ.தி.மு.க.வின் இன்றைய இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
எல்லாக் கட்சிகளிலும் இரண்டாம் கட்டத்தில் ஏற்படுகின்ற வெற்றிடங்கள் தவிர்க்க முடியாதது மாத்திரமல்ல, அவை அவ்வப்போது நிரப்பப்பட்டுவிடும் என்ற உண்மையை தினமலர் மறந்தது ஏனோ?
எந்த இரண்டாம் கட்டத் தலைவர்களின் விலகல்களும் ஒரு கட்சியைப் பலவீனப்படுத்த முடியாது என்பதையும், வெற்றிடத்தைக் காற்று நிரப்புவது போல காலியிடங்களை கட்சித் தலைமை நிரப்பிக் கொள்ளும் என்பதையும்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. தினமலர் இதனை மறுக்கத் துணியுமா?
மறுமலர்ச்சி தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் என்றெல்லாம் கட்டங்கள் எதுவும் இல்லை.
கொள்கைக்காக வாழும் இலட்சோபலட்சம் தொண்டர்களின் பாச உணர்வில் எழும்பி நிற்கும் மாளிகைதான் மறுமலர்ச்சி தி.மு.க. இலட்சியத் தாகமும், அறிவுக் கூர்மையும் கொண்ட ஆயிரமாயிரம் தளகர்த்தர்களைத் தன்னகத்தே கொண்ட கட்சிதான் மறுமலர்ச்சி தி.மு.க. கண்ணை இமைகாக்க மறந்தாலும் மறக்கும். ஆனால், என்னைக் காக்க மறவாத தலைவன் வைகோ என்று ஒவ்வொரு தொண்டனும் நம்புகின்ற தலைவர்தான் வைகோ. அந்த நேசமும், நெருக்கமும்தான் மறுமலர்ச்சி தி.மு.க.வின் தடங்கல் இல்லா பயணத்துக்கு அடிப்படைக் காரணமாகும்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் ம.தி.மு.க. தொண்டனின் 15 ஆண்டுகால உழைப்பை உறிஞ்சி, உல்லாசம் எனும் பதவிகளை அனுபவித்துக் கழித்தவர்கள்தானே அன்றி, இயக்கம் வளர தம்மை ஓடாய்த் தேய்த்துக் கொண்டவர்கள் இல்லை. அதனால்தான் பதவிப் பித்தர்களின் விலகல்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வை காயப்படுத்த முடியவில்லை!
தேர்தல் கூட்டணியில் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ம.தி.மு.க. பலவீனப்பட்டு விட்டதாகத் தினமலர் காட்ட முனைவது யாரையோ திருப்திபடுத்த என்பது மாத்திரம் எங்களுக்குப் புரிகிறது. இது தினமலர் பேண விரும்புகின்ற தரத்திற்கு அழகல்ல.
அரசியல் பகைவர்களை களமாடி வெல்லக்கூடிய சக்தி எங்கள் வைகோவுக்கு உண்டு. வேறு கட்சிகளில் காண முடியாத சொற்போர் புரிவதில் வல்ல நாஞ்சில் சம்பத், மல்லை சத்யா, சிவகங்கை அ.கணேசன், செந்திலதிபன், அழகுசுந்தரம், ஈட்டிமுனை இளமாறன், மணிவேந்தன், அந்திரிதாஸ், மயிலாடுதுறை அழகிரி என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பேச்சாளர் படை எதிர்ப்புகளை தேடிச் சென்று அழித்தொழிக்கும் ஆற்றலோடு நிற்கிறது. எங்கள் பகைவனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் திராணி மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு இருக்கிறது.
ஆனால், எல்லாத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டிய தினமலர் எங்கள் பகைவர்களின் கை வாளாக மாறி விச அம்புகளை எங்கள் மீது வீசுவது சரிதானா?
ஒரு குடும்ப ஏகாதிபத்தியம் ஆறேழு அதிகார மய்யங்களுடன் தமிழ் நாட்டையே ஆட்டிப்படைத்து கொண்டிருப்பதை நெருப்பாய் பொசுக்க வேண்டிய தினமலர், நீர்த்துப் போனது ஏன்? எதனால்? அது மாத்திரமல்ல, அக்கிரமத்தையும் அதர்மத்தையும் தகர்க்கும் நோக்குடன் வாளாகவும் வேலாகவும் சுழன்று வரும் வைகோவை காயப்படுத்துவது சரிதானா?
‘தினகரன்’ நாளிதழ் அலுவலகத்தில் பட்டப் பகலில் நடந்த படுகொலை கோரத் தாண்டவத்தை நடுநிலையில் நின்று கொந்தளித்திருக்க வேண்டிய தினமலர், அந்த அக்கிரமத்தை ஊருக்கு ஊர் உலுப்பி எடுத்த ஒரே அரசியல் தலைவரான வைகோவைக் காயப்படுத்துவது முறைதானா?
ம.தி.மு.க.-வின் சறுக்கல்கள் பற்றி பட்டியல் இட்டுள்ள தினமலர், இரண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள்; இரண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள்; மூன்று உள்ளாட்சி மன்ற பொதுத் தேர்தல்கள்; ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் என கட்சி தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் பன்னிரண்டு தேர்தல்களை தன்னந் தனியாக சந்தித்தபோது, “ம.தி.மு.க.வே சறுக்காத கட்சி...” “வைகோவே நேர்மையான தலைவர்...” அவர்களை முன்னிலைப்படுத்தி எழுதுவோம் என்று முதுகெலும்போடு ஒரு வரிச் செய்தியாவது எழுதி வெளியிட்டதுண்டா?
வாஜ்பாய் மந்திரி சபையில் பதவிச் சுகத்தை அனுபவித்துக் கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் கள்ள உறவு கொண்டு - மத்திய மந்திரி முரசொலி மாறன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வாஜ்பாய் சுடுகாட்டுக்கு வந்து திரும்புவதற்கு உள்ளாக காங்கிரசுடன் கைகோர்த்துக் கொண்ட கலைஞர் கருணாநிதியின் சறுக்கல்களை விமர்சித்தது உண்டா?
எந்தக் கட்சியினரைப் பார்த்து பண்டாரம் பரதேசிகளை அடித்து விரட்டுங்கள் என்று இழிவாக எழுதினாரோ, பேசினாரோ, பின்னர் அதே பாரதிய ஜனதாவுடன் உறவு கொண்ட கலைஞர் கருணாநிதியின் சறுக்கல்களை ‘தினமலர்’ என்றேனும் சாடியதுண்டா?
தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வது குறித்து கணக்கிட்டால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கட்டத்தில் தத்தமது கட்சியின் நலனுக்காக வெவ்வேறு அணிகளில் நின்று வந்துள்ளன. மறுமலர்ச்சி தி.மு.க. தொண்டர்களின் முழுமையான விருப்பத்தின்படியே கூட்டணி அமைத்து வந்திருக்கின்றது. அதனால்தான் தேர்தல் தோல்விகள் கட்சியின் கட்டுமானத்தைச் சிதைக்க முடியவில்லை. தொண்டர்களையும் வைகோவிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. எல்லா விலகல்களுக்கும், எல்லா தோல்விகளுக்கும் பின்னரும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்து முறையான அமைப்பு பலத்தோடு இயங்குகின்ற கட்சி மறுமலர்ச்சி தி.மு.க. என்கிற கர்வத்தோடு தலைநிமிர்ந்து நிற்கின்றோம். இந்நிலையில் எங்களை மட்டும் குறிவைத்து தாக்க வேண்டிய அவசியம் என்ன?
மறுமலர்ச்சி தி.மு.க. தமிழர் உரிமைக் குரல் கொடுக்கும் இயக்கமாய் இம்மண்ணில் நிலை பெற்றுவிட்டது. உலகத்தின் எந்த மூலையில் இருக்கின்ற தமிழனும் தனக்கு தன் இனத்தக்கு ஒரு தீங்கு என்றால் அவன் தொடர்பு கொள்கின்ற தமிழ்நாட்டின் முதல் தலைவர் வைகோ தான். அவர் தமிழர்களின் உரிமைக் குரலாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார்.
மறுமலர்ச்சி தி.மு.க.-வை அழிப்பதன் மூலம் வைகோவுக்கு தமிழ்ச் சமுதாயம் வழங்கி இருக்கின்ற அந்த அங்கீகாரத்தை தமது ஆயுட்காலத்திற்குள் துடைத்து எறிய கலைஞர் கருணாநிதி விரும்புவதன் விளைவுதான் அவர் ம.தி.மு.க.வை அழிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளாகும்.
அந்த முயற்சிகளை முறியடிப்பதற்கும், வைகோவின் பொது வாழ்வைப் பாதுகாப்பதன் மூலம் தமிழினத்தின் உரிமைக் குரலைப் பாதுகாக்க இலட்சோப இலட்சம் தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக எழுவோம்.
எனவே, தினமலர் நாளிதழ் ம.தி.மு.க.வை களங்கப்படுத்துவதை விட்டுவிட்டு, அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையைப் பெறுகின்ற வகையில் தன்னைத் திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதனை அரசியல் கடமைக்காக தினந்தோறும் படிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்ற ஒரு அரசியல் தொண்டன் என்ற முறையில் வேண்டுகிறேன்.
‘தினமலர்’ இதழின் (22.3.2009)அவதூறுச் செய்தியை மறுத்து அவ்விதழின் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.
Sunday, March 29, 2009
தினமலருக்கு கண்டனம் .
Thursday, March 26, 2009
அரண்மனை நாயான பொன்முடிக்கு மு. ராஜேந்திரன் பதில்.
தமிழர் விரோத கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தாமும் ஒரு அமைச்சராக இருப்பதைக் காட்டிக் கொள்வதற்காக அமைச்சர் பொன்முடி மனநோயால் பாதிக்கப்பட்டவனுக்கு உரிய இயல்போடு எங்கள் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை ஒருமையில் பண்பாடற்ற வார்த்தைகளால் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டக் கல்லூரிக்குள் காவல்துறை நுழைந்து தடியடி நடத்திய செயலுக்கு காரணமான தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் சரித்திரம் கண்டிராத இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும்.” இப்படித்தான் வைகோ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடிய “நிதானத்தில்” இல்லாத போக்கிரி மந்திரியான நீ உயர்கல்வித் துறையை எந்த இலட்சணத்தில் நிர்வகிப்பாய்?
தார்மீகப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் ராஜினாமா செய்யச் சொன்னதை, டிஸ்மிஸ் செய்யச் சொன்னதாக வைகோவின்அறிக்கையை நீயாகத் திருத்தி பதில் என்கிற பெயரால் “சாராய வாந்தி’ எடுத்திருக்கிறாய்.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை யாரும் தங்கள் பரம்பரை பாத்தியதை சொத்தில் இருந்து தானமாகத் தந்துவிடவில்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க.வுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்து கடமையாற்றிய அப்பழுக்கற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வைகோவை கொலைப்பழி சுமத்தி தூக்கி எறிந்து தி.மு.க.வின் உயிர்ச் சக்தியை இழக்கச் செய்தது உன் தலைவரன்றி வேறு யார்?
வைகோவின் வெளியேற்றத்துக்குப் பின் அவருக்கு இணையான ஒரு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரை உன்னால் காட்டமுடியுமா?
ஏற்ற பதவிக்குப் பெருமையும், புகழும் சேர்த்த வைகோ எங்கே? இரகசியம் காக்க வேண்டிய மந்திரி சபை முடிவை கொல்லைப்புற வழியாக வெளியே சொல்லி மாட்டிக் கொண்ட உன் துரோகப் புத்தி எங்கே?
வைகோவை விடுதலை செய்யக் கோரி கோடி கையெழுத்தை மக்களிடம் பெற்று அனுப்பியது குக்கிராமங்களில் வேரோடிக் கிடக்கின்ற ம.தி.மு.க. தொண்டனே தவிர, அந்த விண்ணப்பத்தை போலி தி.மு.க.வான நீ கையால் தொட்டு எத்தனை பேரிடம் கையெழுத்து வாங்கினாய், சொல் பார்ப்போம்?
‘பொடா’ சட்டத்தில் பறிக்கப்பட்ட பேச்சுரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் காப்புரிமை பெற்று கம்பீரமாக வெளிவந்த தன்மானச் சிங்கம் தான் வைகோ.... எவரிடத்திலும் அண்டி ஒண்டி, ஒதுங்கி - குய்யோ, முறையோ எனக் குமுறி கூத்தாடி வெளிவந்தவர் அல்ல. வைகோவின் விடுதலைக்கு வைகோவின் சட்டப் போராட்டம்தான் காரணமே தவிர வேறு எதுவும் அல்ல.
1998ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கிய போது அ.தி.மு.கவுடன் நேர்த்தியான தோழமை கொண்டிருந்தபோதும், அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் நிகரற்ற செல்வாக்குப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியபோதும் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கை வழி நின்று ஆட்சிக் கலைப்பு கோரமாட்டோம் என்று சைதாப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பிரகடனம் செய்து உன்னைப் போன்ற பதர்கள் பதவியில் தொடரக் காரணமாக இருந்த கொள்கை ஏறு வைகோ என்பதை மறந்துவிடாதே.
புது டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் வைகோ தலைமையில் இயங்கும் கட்சி தான் உண்மையான ம.தி.மு.க. என உத்தரவுப் பிறப்பித்த பிறகும் கட்சியைக் காட்டிக் கொடுத்த இரண்டு துரோகிகளை அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு ம.தி.மு.க. பெயரில் இன்று வரை அழைத்து அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற சில்லரைப் புத்திக்காரரிடம் உள்ள பண்பைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு நற்பண்பும் மனிதநேயமும் கொண்டவர் வைகோ என்பதை எந்தக் குன்றத்தின் மேல் நின்றும் என்னால் ஓராயிரம் உதாரணங்களுடன் சொல்ல முடியும். நீயா வைகோவுக்கு பண்பு போதிக்கப் புறப்பட்டிருக்கிறாய்!
தமிழ் ஈழ தேசத்திற்கு தியாகப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய வைகோவை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்பதையும் வைகோவை குறிபார்த்த துப்பாக்கி தோட்டாவை தம் உடலில் வாங்கிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்து வைகோவைப் பாதுகாத்தவன் விடுதலைப் புலி சரத் என்கிற வீரத்திருமகனே அன்றி அவருக்கு உயிர்ப் பிச்சை வழங்கியவர் எவருமில்லை என்பதுதான் அந்தச் சரித்திரப் பயணம் உணர்த்தும் உண்மையாகும்.
ம.தி.மு.க. சின்னாபின்னமாகிவிட்டது. கூண்டோடு காலியாகிவிட்டது என்றாலும் உன்னோடு கூட்டு வைத்து 4 எம்.பி.க்கள் வெற்றிபெற வழி வகுத்தவர் என்று நீ குறிப்பிடுகிறாய். தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைகோவின் பிரச்சாரம்தான் மூல காரணம் என்று நாடும் ஏடும் சொன்னதை மறந்துவிட்டாயா? நான்கை கொடுத்து இழிவுபடுத்திய உனது பண்பை பொறுத்துக் கொண்டு நாற்பதும் வெற்றி பெற சுழன்றடித்த புயல் வைகோவின் தியாகத்தால் இன்று பதவிச் சுகம் அனுபவிக்கும் கூட்டம் எந்தக் கூட்டம் என்று ஊருக்குத் தெரியும்.
எங்கள் கட்சி சிறிய கட்சிதான் என்று மேடைகளில் கம்பீரமாக ஒப்புக் கொள்ளும் ஆண்மையாளர் வைகோ. கவிஞர் இக்பால் சொல்வான் பிறை நிலாவே கவலைப்படாதே, பூரணச்சந்திரன் உனக்குள் புதைந்து கிடக்கிறான் என்று. “பிறை நிலவைப் போல் ம.தி.மு.க. இன்றைய அரசியல் வானில் விளங்குகிறது. அது பூரணச் சந்திரனாக பிரகாசிக்கும் காலம் வந்தே தீரும். தமிழ் தேசியம் பேசுகின்ற உன்னைப் போன்ற திராவிடப் போலிகள் அந்த முழுமதியின் ஒளியில் குளிர்காய வரும்போது வாலிபர்களின் கால்களில் கிடக்கும் காலணிகள் அவர்களின் கைகளுக்கு வந்துவிடும் என்பதை மறந்துவிடாதே.
தறிகெட்டு, நெறிகெட்டு, முறைகெட்டு அதிகாரத் திமிரில் கொக்கரிக்கின்ற அரண்மனை நாயான பொன் முடியே!
ஈழத்துக்கு கலைஞர் கருணாநிதியை அனுப்புவதற்கு ராஜீவ்காந்தி தீர்மானித்தாரா? தமிழனாக அல்லது தமிழச்சியாக இல்லாத பல பேர் தமிழ் ஈழப்போரை கொச்சைப்படுத்தலாம். அதை சட்டை செய்ய வேண்டியது இல்லை. ஆனால், தமிழனாகப் பிறந்து ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துகின்ற இனத்தின் துரோகிகள் யார்? வைகோ சிறையில் இருந்து வந்து பிரச்சாரம் செய்தால் அந்த அனுதாபத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி ஆண்டு அனுபவிக்கலாம் என திட்டமிட்டு, பசப்புமொழி பேசி நீலிக் கண்ணீர்விட்டவர்கள் யார்?
தாமாக வரும் மூத்திரத்தைப் பிடிப்பதற்கு மேடைக்கு பாத்திரத்தோடு சென்று மூச்சு நிற்கும் வரை பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். சாவு நெருங்கிவிட்டபோதும் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று பேசியவர் அண்ணா. ஒரு இனமே கொடியவன் ராஜபக்ஷேவின் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கும்போது உடல் நலிவைக் காரணம் காட்டுகிறவன் மனிதனாக இருக்கலாம். ஆனால், தலைவனாக இருக்க முடியாது என்கின்றேன். ஒப்புக் கொள்கிறாயா?
தமிழ் ஈழப்போரை முற்று முழுதாக ஆதரிப்பதால் எங்கள் பொது வாழ்வு நாசமாகிப் போனாலும் கவலை இல்லை என்று அறிவித்திருக்கிறார் வைகோ. ஈழத்தைக் காட்டி எனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி என்று அடிக்கடி சொல்லி வருகிறார் கலைஞர். இது சரிதானா?
இக்கேள்விகள் குறித்து வாய்நீளம் காட்டும் மந்திரி பொன்முடியே உன்னோடு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். நீ தயார் தானா? ஆம் எனில் இடம். நேரம் அறிவிப்பு செய்.
இறுதியாக ஒரு வார்த்தை. இனப் பகையைத் தாக்கி அழிக்க நேருகின்ற போதிலும் நமது அடிப்படைப் பண்பாடு சிதைந்து விடக்கூடாது என அடிக்கடி வாலிபத் தம்பிகளுக்கு அறிவுரை வழங்குவார் என் தலைவர் வைகோ. அவரது அறிவுரையை இந்நிகழ்வில் என்னால் பின்பற்ற முடியவில்லை. முள்ளை முள்ளால் எடுப்பதற்காக நான் உனக்கு ஒருமையில் பதில் சொல்ல நேர்ந்துவிட்டது. இதற்காக எனது தலைவர் வைகோவிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
(அமைச்சர் பொன்முடிக்கு இம்மடல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.)
மு. ராஜேந்திரன்
Sunday, March 22, 2009
குமுதம் ரிப்போர்டருக்கு கடிதம்
மதிப்பிற்குரிய குமுதம் ரிப்போர்ட்டர், பதிப்பாசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் 19.03.2009 ஆம் நாளிட்ட வாரம் இருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் 'சுவாமி வம்பானந்தா' பகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க. - வையும், தன்னலமற்ற தலைவர் வைகோ அவர்களையும் களங்கப்படுத்திச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.
மாணவப் பருவந்தொட்டு அண்ணா கண்ட இயக்கத்தில் பணியாற்றி, வைகோ அவர்கள் வெளியேற்றப்பட்டதன் மூலம் உழைக்கின்ற உண்மைத் தொண்டனுக்கு அங்கு இடம் இல்லை என்பதனை உணர்ந்து வைகோ தலைமை ஏற்று மனமகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்ற இலட்சத்திற்கும் மேற்பட்ட உணர்ச்சியுள்ள திராவிட இயக்கத் தொண்டர்களில் ஒருவன் என்கிறமுறையில், முற்றிலும் நடுநிலை தவறி எழுதப்பட்டுள்ள 'வம்பானந்தா' விமர்சனத்திற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
திராவிட இயக்கத்தில் ஒரு குடும்ப ஏகாதிபத்தியத்தின் அழுத்தம் தாங்காமல் வைகோ வடிவில் காலம் உருவாக்கிய கட்சிதான்
மறுமலர்ச்சி தி.மு.க.
தமது மகனின் பட்டாபிசேகத்திற்குத் தடையாக இருக்கின்றானே என்று கொடிய கொலைப்பழி சுமத்தி வைகோவை வெளியேற்றிய அந்தநிமிடத்தில் தொடங்கிவிட்ட மறுமலர்ச்சி (இலட்சிய) போருக்கு தலைகொடுக்க முன்வந்த ஆயிரம் ஆயிரம் அடிமட்டத் தொண்டர்கள் எந்தப் பிரதிபலனும் பாராமல் நாட்டின் நாலாதிசைகளிலும் ஊடுருவி உயிர்த் துடிப்புடன் கடமையாற்றி வருகிறார்கள் என்பதை எங்கள் எதிரிகள்கூட மறுக்கமுடியாது.
புயல்வேகம் கொண்ட வைகோவின் அறிவிப்புகள் ஆணையாகவே ஏற்கப்பட்டு அந்த நொடியிலேயே செயல்வேகம் பெறுகிறது என்றால் 'இலட்சியதாகம்' கொண்ட அந்த அடிமட்டத் தொண்டர்களின் உன்னதமான தன்னலமற்ற உழைப்பே காரணமாகும்.
மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் விலகி ஓடிப்போனவர்களின் பட்டியலை வம்பானந்தாவும் அவர்களுக்குத் தகவல்தானம் தந்து அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற அற்பப் பதர்களும் புரட்டிப்பார்ப்பார்களேயானால், ஆட்சி, அதிகாரம், பதவி, பணம் என்ற நான்கு காரணிகளுக்குள் ஏதாவது ஒன்றுக்காகத்தான் இருக்கமுடியுமே தவிர கொள்கை மாறுபாட்டால் விலகிவிட்டதாகக் கருதமுடியாது என்பதை என்னால் அடித்துச் சொல்லமுடியும்.
இலாப - நட்டக் கணக்குப் பார்க்கின்ற வணிகத்தலமாக அரசியலைக் கருதுகிறவர்கள் தான் வருவார்கள், போவார்கள். அதில் பழையவர் - புதியவர் என்கிற பேதம் எதுவும் இல்லை. இவர்கள் இயக்கத்தால் தங்களுக்கு என்ன லாபம் என்ற கணக்கைப் போட்டுப் பார்ப்பார்களே தவிர தம்மால் இயக்கத்திற்கு என்ன லாபம் என்று எந்நாளும் நினைத்துச் செயல்பட்டு இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் கட்சியில் இருந்து போகிறார்களே தவிர வேறல்ல. இதனால் கட்சியில் தன்னல மனப்பாங்கு அகல்கிறது. கட்சி எழுச்சியும், புதுப்பொலிவும் பெறுகிறது. பாசிகள் அகற்றப்பட்ட தண்ணீர் தொட்டியாக தூய்மை பெறுகிறது. பயிர்களைக் கெடுக்கும் களைகள் அகற்றப்படுகின்றன. கட்சி எனும் பயிர் செழித்து வளர உதவுகின்றன. எனவே சுயநலம் கொண்டவர்களின் விலகல், கட்சியை வலிமைப்படுத்துமே அன்றி தளர்ச்சி அடையச் செய்துவிடாது என்பதே அசல் உண்மையாகும்.
சில விலகல்களால் கட்சி கலகலத்துப்போய்விடும் என்றோ காணாமல்போய் விடும் என்றோ சொல்வீர்களானால் இந்நாட்டில் காங்கிரசும், தி.மு.க.வும் ஏன் கம்யூனிÞட் கட்சிகளும் கூட பல காலத்திற்கு முன்னரே காணாமல் போய் இருக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தகுதிகள் எல்லாம் இருந்தும்; தொண்டர்கள் ஒருசேர விரும்பியும் தம் காலடியில் வந்து விழுந்த அதிகாரப் பதவிக்கு ஆசைப்படாமல் தம்மோடு வந்தவர்களைப் பெருமைப்படுத்த தமது சகாக்களுக்கே பதவிகளைப் பெற்றுத்தந்த வைகோவைப் போன்ற ஒரு தலைவரை இந்திய நாடு இதுவரை சந்தித்ததில்லை என்பதை உணருமா குமுதம் ரிப்போர்ட்டர்?
பதினெட்டு மாதகாலம் காற்றாடி இல்லாத கொட்டடியில் தமிழ் இன உரிமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு உடல் 'நலிந்து' கிடந்தபோது, வைகோ அவர்களால் மத்திய மந்திரிகளாக ஆக்கப்பட்ட சொந்தக் கட்சியினர் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து திரும்பியதைக்கூட மகிழ்ச்சியுடன் உள்வாங்கிக் கொண்ட வைகோவின் பெருந்தன்மைக்கும், ஜனநாயக மாண்பிற்கும் இணையான ஒரு சம்பவத்தை இந்தியாவில் எந்தக் கட்சியிலாவது அடையாளம் காட்டுமா குமுதம் ரிப்போர்ட்டர்?
இப்படிப்பட்ட தன்னலமில்லாத் தலைவர் வைகோவையும் குடும்ப அரசியல் விட்டு வைக்க வில்லை என்று எழுதியுள்ளீர்கள். இந்த வாசகங்களை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நெஞ்சு கொதிக்கிறது.
தாம் போட்டியிட்டால் 3 இலட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றிபெறலாம் என்று நாடு ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசித் தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என்பது மாத்திரமல்ல. அந்த இடத்தில் தகுதிவாய்ந்த தமது உடன் பிறந்த தம்பி வை.இரவிச்சந்திரனை வேட்பாளராக அறிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருக்கலாமே! உடல் ஊனமுற்று, உறுப்புகள் எல்லாம் செயல் இழந்த 50 க்கும் மேற்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை தமது வீட்டில் வைத்திருந்து மருத்துவ உதவிசெய்த "குற்றத்துக்காக" (?) கொடிய தடாச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட தியாகசீலர்தானே வை.இரவிச்சந்திரன்.
அதுமாத்திரமல்ல, வாலிபப் பெரியார் ஏவிபி ஆசைத்தம்பியைப்போல கைவிலங்கு பூட்டப்பட்டு அடக்குமுறைக்கு ஆளான கொள்கை ஏறு அவர். விளம்பர வெளிச்சமின்றி ஏழை - எளியோர் தம் துயரங்களுக்கு ஆறுதலாய் இன்றைக்கும் விளங்கிவரும் அந்த மக்கள் சேவகரை நிறுத்தி வெற்றி பெற வைத்தாரா வைகோ! எது குடும்ப அரசியல்?
தமிழகத்திலும் இந்தியாவிலும் பல தலைவர்கள், ஒழிக்கப்பட்ட மன்னர் ஆட்சியின் மறுவடிவங்களாக மாறி தகுதிகள் இல்லாத தங்கள் பிள்ளைகளை அரசியலுக்குள் திணிக்கின்ற "கலைஞர் நோய்" வெகுவேகமாகப் பரவி வருகிறது.
அப்படி திணிக்கப்பட்டுள்ள பல வாரிசுகளைக் காட்டிலும் செயல்திறத்திலும், அறிவாற்றலிலும், அஞ்சாது நெஞ்சு உயர்த்தும் போர்க்குணத்திலும் ஏன் தோற்றப் பொலிவிலும்கூட சிறந்து விளங்கும் தமது ஒரே மகன் துரைவையாபுரியை களத்தில் நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிவிட்டாரா வைகோ! அப்படி ஆக்கியிருந்தால் கூட தகுதி திறமை அடிப்படையில் அதனை எவரும் மறுத்திட முடியுமா?
இவர்களைப் பதவிகளுக்கு முன் நிறுத்தவில்லை என்பது மாத்திரமல்ல தாம் பொதுச் செயலாளராகக் கடமையாற்றும் தாயகத்தில்கூட இவர்கள் தலை தென்பட்டதில்லை என்கிற அளவிற்கு குடும்பத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத தெளிந்த நீரோடைக்குப் பெயர்தான் வைகோ. கண்விழிக்காத குக்கிராமங்களில் உள்ள ஆயிரம் ஆயிரம் எளிய வீடுகளின் சுவர்களில் பொருத்தப்பட்டுள்ள காலண்டர்களில், பல ஏடுகளில், சிலநேரம் சில தொலைக்காட்சிகளில் எனத் தென்படுகின்ற என் தலைவர் வைகோவின் திரு உருவத்தைப் பார்த்தமாத்திரத்தில் இதோ அப்பா... இதோ மாமா; இதோ அண்ணாச்சி; இதோ அண்ணன்; இதோ தாத்தா என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உறவுமுறை சொல்லி அழைக்கின்ற லட்சோபலட்சம் கழகக் குடும்பங்களின் கண்ணுக்குள் மணியாக விளங்கும் தலைவர்தான் வைகோ. அவர்கள்தான் வைகோவின் குடும்பம். அவர்களை நம்பித்தான் வைகோவின் பயணம். அந்தப் பாசப் பிறவிகளாம் கழகக் குடும்பங்களையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் உரிமை வாழ்வு ஒன்று தான் வைகோவின் இலட்சியம். இதில் எங்கே அய்யா வந்தது வைகோவின் குடும்ப அரசியல்.
நடுநிலை தவறாமலும்; நம்பகத்தன்மை சிதையாமலும் தமிழர் நிலத்தில் மதிக்கப்படுகின்ற குமுதம் குடும்பத்தின் மற்றொரு வரவான 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரம் இருமுறை இதழ், தம் குடும்பப் பெயருக்கு களங்கமும்; அவமானமும் ஏற்படுகின்ற வகையில் 'வம்பானந்தா' வம்பளப்பது அதன் தரத்திற்கு ஏற்றதல்ல.
இதுபோன்ற செய்திகள் வெளிவர வேண்டுமென விரும்புகின்ற அக்கறை உள்ள சக்திகளின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்ற வடிகாலாக குமுதம் ரிப்போர்ட்டர் மாறிவிடக்கூடாது என்பது குமுதம் குடும்பத்து வாசகன் என்கிறமுறையில் எனது கவலை ஆகும்.
அயோக்கியர்களின் புகலிடமாகவும்; ஊழலின் உறைவிடமாகவும் தன்னலம் நாடுவோரின் சத்திரமாகவும் மாறிப்போய்விட்ட நமது நாட்டு அரசியலில் தியாகம், இனநலம், ஓய்வறியா உழைப்பு, உண்மை, நிலைகுலையா நேர்மை, ஒழுக்க நெறிகள் என இவற்றை மட்டுமே தம்மில் கொண்டு 45 ஆண்டுகாலமாக அறம் சார்ந்த அரசியலை நடத்திவரும் எங்கள் இலட்சியத் தலைவர் வைகோ அவர்களை புகழ்ந்து எழுதுங்கள் என்று உங்களை வலியுறுத்த மாட்டேன்.
ஆனால், உண்மைக்குமாறான விமர்சனங்களை எழுதி... எழுதி... அந்த நல்ல உள்ளத்தில் ஊமைக்காயங்களை ஏற்படுத்தி விடாதீர்கள் என தமிழின உணர்வால் வேண்டுகிறேன்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் (19.3.2009)
அவதூறுச் செய்தியை மறுத்து அவ்விதழின் ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.
